'தாய் கிழவி' படத்தின் 100 வது நாள் வெற்றி விழா - இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த சிவகார்த்திகேயன்!

 
தாய்க்கிழவி சிவகார்த்திகேயன்

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துத் திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ள 'தாய் கிழவி' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த 100 வது நாள் வெற்றி விழாக் கொண்டாட்டத்தில், படக்குழுவினர் மற்றும் முக்கியத் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இத்திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவதற்குக் காரணமாய் இருந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் படத்தில் பணியாற்றிய அனைத்துத் திரைக் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி மேடையில் கௌரவிக்கப்பட்டது.

படத்தின் இந்தவெற்றியைப் பாராட்டும் விதமாகவும், அறிமுகத் திரைப்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநரை ஊக்கப்படுத்தும் விதமாகவும் ஒரு முக்கியப் பரிசு வழங்கப்பட்டது. 'தாய் கிழவி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் சுந்தரம் ஆகிய இருவரும் இணைந்து, படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்குப் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை மேடையிலேயே இன்ப அதிர்ச்சியாகப் பரிசாக வழங்கினர்.

முன்னணி நடிகராக மட்டுமின்றித் தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் இந்தச் செயல், தமிழ் சினிமா வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.