“ஆ.ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது; அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!

 
திருமா

திமுக போராட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய பேச்சு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், அரசியல்வாதிகள் எப்போதுமே நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தொல்.திருமாவளவன், மனித மாண்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்ததைச் சுட்டிக்காட்டினார். ஆனால், திமுக போராட்டத்தில் அந்த மாண்பு கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆ.ராசா மற்றும் முன்னணிப் பொறுப்பாளர்களின் பேச்சு தவெகவுக்கு எதிரான கருத்தாக மட்டுமல்லாமல், திமுகவுக்கே எதிரான கருத்தாகப் பார்க்க முடியும் என்றார். நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ராசா

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இடதுசாரிகள் தொடர்ந்து தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகக் கூறி வருவதாகவும், தனித்துப் போட்டியிடுவது அவர்களது உரிமை மற்றும் சுதந்திரம் என்றும் தெரிவித்தார். மேலும், இடதுசாரிகளின் இந்தத் தனித்துப் போட்டி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றிக்கு விசிக முழுமையாகப் பங்காற்றும் என்றும் குறிப்பிட்டார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த கேள்விக்கு, மக்களின் இசைவு மற்றும் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், பரந்தூர் விமான நிலையத்தை இதற்கு உதாரகமாகக் காட்டியதுடன், மக்களின் கருத்தின் அடிப்படையில்தான் அரசு இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்றார்.