சமரசம் பேச அழைத்துச் சென்று அதிமுக நிர்வாகி கொலை: சிவகாசியில் பரபரப்பு!
Updated: Nov 16, 2026, 10:37 IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டி பகுதியில், அதிமுக ஒன்றிய தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் ராஜாகனி (28) என்பவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட முன்விரோதத்தைச் சமரசம் செய்து கொள்ளலாம் எனக் கூறி, வீரசிங்கம் என்பவரும் அவரது நண்பர்களும் ராஜாகனியை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலால் ராஜாகனியைக் குத்திக் கொலை செய்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தப்பியோடிய வீரசிங்கம் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
