டெல்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு!
டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில் 6 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க அஞ்சப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த இந்தக் கட்டிடம் சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானது ஆகும். இது ஐந்து தளங்களைக் கொண்ட ஆண்களுக்கான பேயிங் கெஸ்ட் தங்குமிடமாகப் பயன்படுத்தி வரப்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது உள்ளே 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள இந்தப் பகுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடப்பதற்குச் சற்று முன்பு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரைத் தீவிரமாக மீட்ட மீட்புப் படையினர், அவர்களை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் தீயணைப்புக் குழுவினருடன் இணைந்து தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்துக் கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் ரேகா குப்தா, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
