கோவில்பட்டியில் ஸ்கெட்ச்.. 30 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ தேர்தலில் போட்டி? - மதிமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!

 
வைகோ ஸ்டலின் வைகோ ஸ்டலின்

தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான வைகோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேரடித் தேர்தல் களத்தில் குதிக்கப்போகும் செய்தி, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளது.  2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா என்ற பலத்த சந்தேகங்களுக்கு இடையே, தொகுதி உடன்பாடு அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் தான்.

கடந்த 2021 தேர்தலை விட இந்த முறை மதிமுகவுக்கு குறைவான தொகுதிகளாக 4 தொகுதிகள் மட்டுமே மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 6 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.  இந்த 4 தொகுதிகளில், 3 தொகுதிகளில் 'உதயசூரியன்' சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட்டும் மதிமுகவின் தனிச் சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வைகோ அழைப்பு

கடந்த முறையை விட தொகுதிகள் குறைந்தாலும், மதிமுக வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை திமுக தரப்பே ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளதால் வைகோ இந்த உடன்பாட்டுக்கு சம்மதித்ததாக கூறப்படுகிறது. வைகோ கடைசியாக 1996-ம் ஆண்டு விளாத்திகுளம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 30 ஆண்டுகளாக அவர் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவே இருந்து வந்துள்ளார்.

இந்த முறை மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று வைகோ எதிர்பார்த்தார். ஆனால், திமுக தலைமை அந்த இடத்தை தேமுதிக-வுக்கு ஒதுக்கியதால் வைகோ கடும் அதிருப்தி அடைந்தார். ராஜ்யசபா வாய்ப்பு கைநழுவியதால், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 'சட்டமன்ற உறுப்பினர்' ஆகி சட்டசபைக்குள் நுழைய வைகோ திட்டமிட்டுள்ளார்.

வைகோ

வைகோ எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு, அக்கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் கோவில்பட்டி தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு 'தனிச் சின்னம்' தொகுதியில் வைகோவே போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

கோவில்பட்டியில் ஏற்கனவே அதிமுக-வின் பலமான வேட்பாளர்கள் மற்றும் தவெக செல்வாக்கு உள்ள நிலையில், வைகோ அங்கு களம் இறங்குவது தென் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.