துயரத்தில் முடிந்த ஸ்கை டைவிங்.. பிரான்சில் விமானம் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி!
பிரான்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் ஸ்கைடைவிங் சாகச வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் பயணித்த 11 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு பிரான்சின் முக்கிய நகரான நான்சி நகருக்கு அருகிலுள்ள டோம்ப்லைன் என்ற பகுதியில் இன்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்கைடைவிங் சாகச விளையாட்டில் ஈடுபடுவதற்காக வீரர்கள் மற்றும் அதன் பயிற்றுநர்களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துள்ளது. ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே, விமானம் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து டோம்ப்லைன் பகுதியில் உள்ள வெட்டவெளித் தரையில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
விமானம் தரையில் மோதி நொறுங்கிய வேகத்தில் அதில் தீப்பற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்கத்தின் காரணமாக விமானத்தில் இருந்த 11 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த விபரம் அறிந்தவுடன் பிரான்ஸ் நாட்டு அவசரக் கால மீட்புக் குழுவினரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விபத்துக் பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பதாலும், எரிபொருள் கசிவு காரணமாக ஆபத்து நிலவுவதாலும், பொதுமக்கள் யாரும் விபத்து நடந்த இடத்தின் அருகே வர வேண்டாம் என்றும், அந்தப் பகுதியை விட்டு தள்ளி இருக்குமாறும் காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்கைடைவிங் சாகச வீரர்களின் உயிரைப் பறித்த இந்த விமான விபத்து பிரான்சில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது மோசமான வானிலை ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்து பிரெஞ்சு வான்வழி விபத்து புலனாய்வுப் பிரிவினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
