தூக்கணாங்குருவியின் மழை கணிப்பு.. கூடுகட்டும் கலையிலும், திசை தேர்விலும் மறைந்திருக்கும் ரகசியம்!
இயற்கையின் மிகச்சிறந்த பொறியாளர்களாகக் கருதப்படும் தூக்கணாங்குருவிகள், தங்களது வாழ்வியல் தேவைகளுக்காகக் கூடுகட்டும் உத்தியின் மூலம் தென்மேற்குப் பருவமழைப் பொழிவை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கும் அசாத்திய திறனைக் கொண்டுள்ளதாகப் பறவையியல் ஆர்வலர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.
இயற்கையோடு இயைந்து வாழும் இந்த அறிவுஜீவிப் பறவைகள், வரவிருக்கும் தென்மேற்குப் பருவமழையின் வீரியம் மற்றும் காற்றின் திசையை முன்கூட்டியே உணரும் ஆற்றல் படைத்தவை. மழைக்காலக் காற்றின் திசை மற்றும் மழையின் அளவைக் கணித்து, அதற்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தங்களது கூடுகளின் நுழைவாயில்களைப் பெரும்பாலும் வடக்கு நோக்கி அமைக்கும் தனித்துவமான பழக்கத்தைக் கொண்டுள்ளன. இதன் மூலம் வரவிருக்கும் மழையின் அளவை மனிதர்கள் எளிதாக அறிய முடிகிறது.

முட்டைகள் மற்றும் குஞ்சுகளைப் பிற எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டி, உயரமான இடங்கள், நீர்நிலைகளுக்கு மேலே தொங்கும் கிளைகள் மற்றும் தங்களுக்கு எளிதாக உணவு கிடைக்கும் விளைநிலங்களுக்கு அருகில் உள்ள இடங்களையே இவை கூடுகட்டத் தேர்வு செய்கின்றன. இதற்காகப் பெரும்பாலும் பனை மற்றும் ஈச்ச மரங்களை இவை அதிகம் பயன்படுத்துகின்றன.
தூக்கணாங்குருவிகளின் கூடுகட்டும் கலை மிகவும் நேர்த்தியானது மற்றும் சுவாரசியமானது: கூடுகட்டும் இடத்தை முதலில் ஆண் குருவியே தேர்வு செய்கிறது. புற்கள் மற்றும் நாரைக் கொண்டு மிக நுணுக்கமாக, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 2 அறைகளைக் கொண்ட ஒரு முழுமையான கூட்டினைத் தடையின்றி உழைத்துச் சரியாக 18 நாட்களில் கட்டி முடிக்கிறது. ஆண் குருவி கூட்டை நேர்த்தியாகக் கட்டினாலும், அந்தக் கூட்டின் இறுதி வடிவமைப்பைத் தீர்மானிப்பது பெண் குருவிகள் தான்.

ஆண் குருவி கட்டிய கூட்டைப் பார்வையிடும் பெண் குருவிகள், அது தங்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்குமா என்பதை ஆராய்ந்து, அதன் பின்னரே கூடுகளின் வாசல் திசையை இறுதி செய்து அங்கு வாழத் தொடங்குகின்றன. இயற்கையின் சீற்றத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பறவைகள் கையாளும் இந்தத் திசைதேர்வு மற்றும் கட்டடக் கலை நுணுக்கங்கள், இயற்கையின் மாபெரும் அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
