அரசு ஊழியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை... தலிபான் அரசு கடும் எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால், அங்குள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நீதிபதிகள் உட்பட ராணுவ மற்றும் சிவில் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும், கடந்த 16 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த புதிய தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ரகசியமாகத் திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களின் தொலைபேசிகள் உடனடியாகக் கைப்பற்றப்பட்டு முற்றிலும் அழிக்கப்படும் எனவும், அவர்களுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த திடீர் தடை உத்தரவு காரணமாகத் தங்களது அன்றாடப் பொதுவான அரசுப் பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பெரும்பாலான அலுவலகக் கடமைகள், முக்கியத் தகவல்கள் மற்றும் ஆவணப் பரிமாற்றங்கள் அனைத்தும் திறன்பேசிகள், புலனம் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவே மிக விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் பஞ்ச்ஷிர் மாகாண ஆளுநர், தனது மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்தத் தடையை உடனடியாக எவ்விதத் தொய்வுமின்றி அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மக்கள் கல்வி கற்பதற்கும், தேவையான தகவல்களைப் பெறுவதற்கும், அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கும் திறன்பேசி ஒரு முக்கியக் கருவியாக விளங்கி வந்ததாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, தலிபான் அரசு பெண்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீது தொடர்ச்சியாக இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. உலக நாடுகளின் நுகர்வோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விசித்திரத் தடைச் செய்தி, ஊடகங்களில் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
