இதுவரை 9 பேர் கைது.. செந்தில் பாலாஜியின் தம்பியைப் பிடிக்க 4 நகரங்களில் தனிப்படை வேட்டை!

 
செந்தில்பாலாஜி அசோக்

தமிழக அரசியல் களத்தை உலுக்கி வரும் தவெக எம்.எல்.ஏ-க்கள் மீதான குதிரைப்பேர வழக்கில் மிக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், கட்சியை விட்டு மாறக் கோரி பல கோடி ரூபாய் பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை உடனடியாகக் கைது செய்யப் போலீசார் வலைவீசியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் "குதிரைப்பேரத்தின் மூலமாக நாற்காலியைத் தக்க வைத்துள்ள அரசு" எனத் தவெக-வைக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வழக்கின் விசாரணையைப் பெங்களூரு மற்றும் தமிழகக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

செந்தில்பாலாஜி

தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, தன்னைச் சில நபர்கள் ரகசியமாகத் தொடர்புகொண்டு கட்சி மாறுவதற்காகப் பெருந்தொகையைப் பேரம் பேசுவதாகக் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறையிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் செயல்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உட்பட இதுவரை 9 பேரை அடுத்தடுத்து அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், இந்த ஒட்டுமொத்தக் குதிரைப்பேரப் பின்னணியின் சூத்திரதாரியாகக் கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் செயல்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்குக் கிடைத்துள்ளன.

செந்தில்பாலாஜி

தலைமறைவாக உள்ள அசோக் குமாரைக் கைது செய்யக் காவல்துறைத் தலைமைப் பக்கத்தில் இருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தங்கியிருக்கக் கூடும் எனக் சந்தேகிக்கப்படும் பெங்களூரு, திருச்சி, கோவை, மற்றும் அவரது சொந்த ஊரான கரூர் உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களில் உயர்மட்டத் தனிப்படை போலீசார் (Special Squad) முகாமிட்டுத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் தொலைபேசி எண்களை உளவுத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட அதே நாளில், திமுகவின் மற்றொரு முக்கியப் புள்ளியான செந்தில் பாலாஜியின் சகோதரரை நோக்கிப் பாய்ந்துள்ள இந்த போலீஸ் வலை, தமிழகத்தில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையேயான அரசியல் யுத்தத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.