எகிறும் தங்கம் விலை... பட்டப்பகலில் கேரளாவில் நகைக்கடையில் 20 சவரன் கொள்ளை... தமிழகப் பதிவெண் காரில் தப்பியோட்டம் - சிசிடிவி வீடியோ வெளியானது!

 
நகைக்கடை கொள்ளை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெரிங்கோட்டுக்குறிச்சியில் உள்ள நகைக்கடையில், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வாடிக்கையாளர்கள் போல நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி மற்றும் கத்திகளைக் காட்டி மிரட்டி சுமார் 20 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் தமிழகப் பதிவெண் கொண்ட காரில் தப்பிச் சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலக்காடு மாவட்டம் கோட்டாயி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிங்கோட்டுக்குறிச்சியில் செயல்பட்டு வரும் 'இஷான் கோல்ட்' என்ற நகைக்கடையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.40 மணி முதல் 3.00 மணிக்குள் இந்தத் துணிகரக் கொள்ளை நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது கடையின் உரிமையாளர் மதிய உணவிற்காக வெளியே சென்றிருந்த நிலையில், கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.


வாடிக்கையாளர்களைப் போலக் கடைக்குள் நுழைந்த 3 நபர்கள், இந்தியில் பேசியபடியே தங்கச் சங்கிலிகளைக் காட்டுமாறு கேட்டுள்ளனர். சிறிது நேரம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த அவர்கள், திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மற்றும் கத்திகளை வெளியே எடுத்து ஊழியர்களை மிரட்டத் தொடங்கினர். ஒருவர் துப்பாக்கியைக் காட்ட, மற்ற இருவரும் கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி நகைகளை அள்ளியுள்ளனர். வந்தவர்கள் மீது சந்தேகமடைந்த ஊழியர்கள் ஏற்கெனவே தகவல் கொடுத்திருந்ததால், கொள்ளை நடந்து கொண்டிருந்தபோதே உரிமையாளர் கடைக்கு விரைந்து வந்தார். அவரையும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய கும்பல், சுமார் 20 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.

பொள்ளாச்சி அல்லது திருச்சூர் வழியாகத் தப்பியதாகச் சந்தேகம்: கொள்ளையர்கள் தமிழகப் பதிவெண் கொண்ட 'ஹூண்டாய் சான்ட்ரோ' காரில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. 3 பேர் கடைக்குள் நுழைந்தபோது, மற்றொரு நபர் காரில் தயாராகக் காத்திருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அக்கும்பல் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருவில்வாமலை நோக்கியோ அல்லது பொள்ளாச்சி வழியாகத் தமிழகத்திற்குள்ளோ தப்பிச் சென்றிருக்கலாம் எனக் காவல்துறையினர் கருதுகின்றனர்.

நகை கொள்ளை

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோட்டாயி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் கடையிலிருந்து தடயங்களைச் சேகரித்துள்ளதோடு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் கொள்ளைக் கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.