முதலமைச்சருக்கு 'காது கேட்கும் கருவி' அனுப்பிய சமூக ஆர்வலர்... கடிதத்தால் பரபரப்பு!

 
காதுகேட்கும் கருவி காதுகேட்கும் கருவி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் முதலமைச்சர் விஜய்க்குத் தபால் மூலம் 'காது கேட்கும் கருவி' மற்றும் கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள  சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான பெரியார் மணி, சென்னை தலைமைச் செயலக முகவரிக்கு முதலமைச்சரின் பெயரிடப்பட்ட ஒரு தபால் பார்சலை அனுப்பியுள்ளார். அந்தப் பார்சலுக்குள் ஒரு புதிய காது கேட்கும் கருவியும் (ஹியரிங் எய்ட்), அதனுடன் ஒரு கோரிக்கை அறிக்கை கடிதமும் இடம் பெற்றுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

அந்தக் கடிதத்தில் சமூக ஆர்வலர் பெரியார் மணி, "தமிழகத்தில் தற்போது புதிய ஆட்சி அமைந்த பிறகு, அண்மைக்காலமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வன்முறைகள் மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகின்றன."

"பாதிக்கப்பட்ட மக்களின் கதறல்களும், தங்களது உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பொதுமக்கள் எழுப்பும் வேதனைக் குரல்களும் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டவே இல்லை; அரசு நிர்வாகம் மக்களின் துயரங்களைக் கேட்காதது போல் பாராமுகமாகச் செயல்பட்டு வருகிறது." 

"எனவே, முதலமைச்சர் அவர்கள் உடனடியாக மக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் பாதுகாப்பு அச்சங்களுக்கும் செவிசாய்த்து, குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்" என்று விநோதமான முறையில் காது கேட்கும் கருவியை அனுப்பியிருப்பது, எதிர்க்கட்சிகளுக்குக் கூடுதல் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.