முதல்வருக்குப் புகாரனுப்பிய சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை - மும்பையில் அதிர்ச்சி!

 
கொலை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ் கஜ்வானி (50). சமூக ஆர்வலரான இவர், உல்லாஸ் நகர் பகுதியில் சில சமூக விரோதிகள் சட்டவிரோதமாகப் போதைப் பொருளர்களான குட்கா மற்றும் பான்மசாலா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், சட்டவிரோதச் சூதாட்ட விடுதிகளை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்குச் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் புகார்களை அனுப்பிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததால், சட்டவிரோதக் கும்பலால் தனது உயிருக்குக் கடுமையான ஆபத்து இருப்பதாகக் கடந்த மாதம் 27-ஆம் தேதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹரீஷ் கஜ்வானி பகிரங்கமாகப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணி அளவில் உல்லாஸ் நகர் ரயில் நிலையம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலரால் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அவரது தலையில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சட்டவிரோதத் தொழில்களுக்கு எதிராக அரசின் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்ச்சியாகப் புகார் அளித்ததன் காரணமாகவே அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 

இதன் பலனாக, இக்கொடூரக் கொலையில் நேரடியாகத் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் கொலையின் பின்னணி குறித்தும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.