16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை... இங்கிலாந்து அரசு திடீர் உத்தரவு!
இன்றைய நவீன டிஜிட்டல் உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைத்தளப் பக்கங்களுக்குப் பெரிதும் அடிமையாகி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைவதுடன் அவர்களின் மன ஆரோக்கியமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகப் பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. இந்த விபரீத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சிறுவர்களின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இங்கிலாந்து அரசு புதிய சட்டத் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எவரும் இனி எவ்வித சமூக வலைத்தளப் பக்கங்களையும் பயன்படுத்தக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த சட்டத்தின்படி சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்களின் பக்கங்களில் கணக்குத் தொடங்கும் பயனாளர்களின் வயதைத் துல்லியமாகச் சரிபார்ப்பதற்கு தொழில்நுட்ப முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த விதிமுறைகளை மீறிச் சிறுவர்களைத் தங்களின் பக்கங்களில் அனுமதிக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பில்லியன் கணக்கில் இமாலயத் தொகை அபராதமாக விதிக்கப்படும் எனவும் இங்கிலாந்து அரசு அனல் பறக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு இங்கிலாந்து நாட்டுப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஆதரவும் வரவேற்பும் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த கட்டுப்பாடுகளால் இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட பள்ளிச் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் பெரும் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர். இங்கிலாந்தைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்களின் நாடுகளில் உள்ள சிறுவர்களின் நலன் கருதி இது போன்ற கடுமையான சட்டங்களைக் கொண்டு வர தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
