இந்தியாவில் விற்கப்படும் குளிர்பானங்களில் 3 மடங்கு அதிக சர்க்கரை - விளாசிய உச்ச நீதிமன்றம்!

 
குளிர்பானம் கூல்டிரிங்க்ஸ்

இந்தியாவில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்க்கப்படுவது குறித்தும், பன்னாட்டு நிறுவனங்களின் இரட்டை நிலைப்பாடு குறித்தும் உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

லண்டனில் விற்கப்படும் ஒரு கேன் ஃபாண்டாவில் 63 கலோரிகள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியாவில் விற்கப்படும் அதே பிராண்ட் ஃபாண்டாவில் 3 மடங்கு கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் 22% கொக்கோ சேர்க்கப்படும் கிட்காட் சாக்லேட்டில், இந்தியாவில் 4.5% மட்டுமே கொக்கோ உள்ளது. அதேபோல இங்கிலாந்தில் சூரியகாந்தி எண்ணெயில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்ஸ், இந்தியாவில் பாமாயிலில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை கலந்த செரிலாக் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகே சர்க்கரையற்ற பதிப்பை அறிமுகப்படுத்த நெஸ்லே முன்வந்தது.

குளிர்பானம்

பாக்கெட் உணவுகளில் உள்ள சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பின் அளவைச் சுட்டிக்காட்ட FSSAI கொண்டுவர நினைத்த சிவப்பு-பச்சை எச்சரிக்கை லேபிள் திட்டத்தைப் பெருநிறுவனங்களின் அழுத்தத்தால் கைவிட்டது. முன்பக்க எச்சரிக்கைக்குப் பதிலாகப் பின்பக்கத்தில் சிறிய கருப்பு-வெள்ளை அட்டவணையை மட்டுமே அச்சிட FSSAI பரிந்துரைத்தது. ஆனால், இதே நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளில் வெளிப்படையான எச்சரிக்கை லேபிள்களைப் பயன்படுத்தி வருகின்றன.

லான்செட் ஆய்வின்படி 2050-க்குள் இந்தியாவில் 45 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்படக்கூடும் என்பதால், பொதுநல வழக்கு விசாரணையின் போது பன்னாட்டு நிறுவனங்களின் இந்தச் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

குளிர்பானம்

சர்வதேச தரத்தை அமல்படுத்துவது கடினம் என்ற FSSAI-ன் கூற்றை நிராகரித்த நீதிபதிகள், இஸ்ரேல் நாட்டின் எச்சரிக்கை முறையை ஆராய உத்தரவிட்டதோடு, இந்தியர்களின் ஆரோக்கியத்தில் அரசுக்கு அக்கறை உள்ளதை உலகம் அறிய வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ரேவந்த் ஹிமத்சிங்கா போன்ற சமூக ஆர்வலர்களின் விழிப்புணர்வுப் பிரசாரமும், உச்ச நீதிமன்றத்தின் தலையீடும் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு விதிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.