பல வருட நிலப் பிரச்சினைக்குத் தீர்வு - கலெக்டருக்கு சீர்வரிசை தட்டுகளுடன் சென்று நன்றி தெரிவித்த முஸ்லிம் பெண்கள்!

 
முஸ்லிம் பெண்கள் சீர்வரிசை கலெக்டருக்கு நன்றி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நிலப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு பெற்றுத் தந்த மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்களுக்கு அப்பகுதி முஸ்லிம் பெண்கள் பாரம்பரிய முறையில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கித் தங்களது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள காஞ்சிரங்குடி பகுதியில் பல ஆண்டுகளாக அளவீடு செய்யப்படாமல் கிடப்பில் இருந்த நிலம் தொடர்பாக, பொதுமக்களும் ஒரு தனியார் அமைப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ராமநாதபுரம்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக விசாரணை நடத்தி உரிய தீர்வு காணுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். கீழக்கரை தாசில்தார் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று நிலத்தை முறையாக அளவீடு செய்து பல வருடப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பூக்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றைத் தட்டுகளில் சீர்வரிசையாக ஏந்தி நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

பொதுமக்களின் அன்போடு வழங்கப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் மீது சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு எப்போதுமே மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காணத் தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.