மகனுக்கும், ஆதரவாளர்களுக்கும் சீட் மறுப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்!
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அவர் ஏற்கனவே வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருடன் வந்த அவரது மகன் மற்றும் முக்கிய ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஓபிஎஸ் முகாமை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தபோது, அவரது மகன் பி. ரவீந்திரநாத் மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ பி. அய்யப்பன் ஆகியோருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னாள் தேனி எம்பியான ரவீந்திரநாத்திற்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என ஓபிஎஸ் தரப்பு நம்பியது. ஆனால், 164 பேர் கொண்ட திமுக பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான அய்யப்பனின் உசிலம்பட்டி தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யப்பனுக்கும் போட்டியிட வாய்ப்பு இல்லாமல் போனது.
தன்னுடன் வந்தவர்களுக்குக் குறைந்தபட்சம் 2 அல்லது 3 இடங்களாவது கிடைக்கும் என ஓபிஎஸ் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஓபிஎஸ்-க்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற பேச்சு ஒருபுறம் இருந்தாலும், அவரது அரசியல் வாரிசின் எதிர்காலம் மற்றும் ஆதரவாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

அதிமுகவில் இருந்து வந்த 13 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பிற்கு மட்டும் ஒரு தொகுதி எனச் சுருக்கப்பட்டிருப்பது, திமுக தலைமை ஓபிஎஸ்-க்கு வழங்கிய 'செக்' ஆகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஓபிஎஸ் போன்ற சீனியர் தலைவரைத் தனது சின்னத்தில் (உதயசூரியன்) போட்டியிட வைத்ததன் மூலம், தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கைச் சிதைக்க முடியும் என திமுக தலைமை கணக்கு போட்டுள்ளது.
