மது வாங்கிக் கொடுத்து, தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது - திருவண்ணாமலையில் பயங்கரம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சொத்துத் தகராறு காரணமாக மகனே தனது தந்தையைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிச்சமுத்து என்பவருக்கும், அவரது மகன் ஆகாஷுக்கும் இடையே சொத்துத் தொடர்பான தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று தந்தை மற்றும் மகன் இருவரும் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த மகன் ஆகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது தந்தை பிச்சமுத்துவைச் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஆரணி தாலுகா காவல்துறையினர், உயிரிழந்த பிச்சமுத்துவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த ஆகாஷைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
