மலை உச்சியிலிருந்து குதித்து மகன் தற்கொலை... காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி; தாயும் குதித்து தற்கொலை!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் காவ்டா மலையில், 18 வயது இளைஞனைத் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்ற முயன்றபோது, பெற்றோர் உட்படக் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கொடூர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், இன்று காலை 10 மணியளவில் காவ்டா மலைக் குன்றின் விளிம்பிற்குச் சென்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இளைஞரை மீட்க அவனது தாய், தந்தை, கிராம மக்கள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து 3 மணி நேரம் போராடினர். பெற்றோரைக் கருத்தில் கொண்டு உயிரை மாய்க்க வேண்டாம் எனப் பலமுறை கெஞ்சியும் அந்த இளைஞன் தொடர்ந்து குன்றின் விளிம்பிலேயே நின்று கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் கீழே இருந்து மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தந்தை, இறுதிக்கட்டத்தில் குன்றின் மீது ஏறிச் சென்று மகனைப் பின்னால் இழுத்துக் காப்பாற்ற முயன்றார். மதியம் 1 மணியளவில் தந்தை மகனைப் பிடிக்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக இருவரும் நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்தனர். இதைப் பார்த்து பதற்றமடைந்த தாயும் சில விநாடிகளில் மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம், காப்பாற்ற திரண்டிருந்த மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
