தாயின் முன்னே மகளுக்கு நேர்ந்த கொடுமை ...கைதான சில மணி நேரத்தில் ஜாமீனில் தப்பிய பாஜக மாஜி அமைச்சர் மகன்!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், பாஜக முன்னாள் அமைச்சர் சுதிர் குமார் பலியானின் மகன் ஆர்யமான் ரகுவன்ஷி (28), ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை, தனது வீட்டின் முன் நின்றிருந்த 25 வயது பெண்ணை, ஆர்யமான் மற்றும் அவரது நண்பர் சௌர்யா குப்தா ஆகியோர் மது போதையில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அநாகரீகச் செயலை அந்தப் பெண்ணின் தாய் தடுத்தபோது, அவரையும் தள்ளிவிட்டு இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆர்யமான் மற்றும் அவரது நண்பரை சனிக்கிழமை கைது செய்தனர். ஆனால், அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் மிகச் சாதாரண பிரிவுகளான 74, 79 மற்றும் 115 ஆகியவற்றின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆர்யமான் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இத்தனை பெரிய குற்றத்தைச் செய்தவர் சட்டத்தின் பிடியில் இருந்து இவ்வளவு எளிதாகத் தப்பியது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், போலீசார் வேண்டுமென்றே குற்றவாளிகளைக் காப்பாற்ற மென்மையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "என் தாயின் கண் முன்னே எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கவில்லை; அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி போலீசார் குற்றவாளிகளுக்குத் துணையாகச் செயல்படுகின்றனர்" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரின் மகன் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், உபி போலீசார் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் முசாபர்நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
