பெற்ற தந்தையை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை ... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
salem

சேலம் மாவட்டம் சங்ககிரி பக்கமுள்ள வைகுந்தம் வெள்ளையம்பாளையம் வேடிச்சிக்காட்டைச் சேர்ந்த 81 வயது விவசாயி சின்னபழனி என்பவருக்கும், அவரது மகன் 61 வயது சுப்பிரமணிக்கும் இடையே தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தைப்பிரித்துக் கொள்வதில் நீண்ட நாட்களாகக் கடுமையான சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு இடையே மீண்டும் நிலம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதை அடுத்து, ஆத்திரமடைந்த மகன் சுப்பிரமணி தன் கையில் வைத்திருந்த விவசாய மண்வெட்டியால் பெற்ற தந்தை என்றும் பாராமல் சின்னபழனியைத் தலையில் கொடூரமாக அடித்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

மண்வெட்டி அடியினால் மண்டை உடைந்து படுகாயமடைந்த முதியவர் சின்னபழனி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த சங்ககிரி போலீசார், சின்னபழனியின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதுடன் வழக்குப் பதிவு செய்து தப்பியோட முயன்ற பாசக்கார மகன் சுப்பிரமணியை உடனடியாகக் கைது செய்தனர். இந்தத் திடுக்கிடும் கொலை வழக்கானது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து முறைப்படி நடந்து வந்தது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தம்பிதுரை ஆஜராகிக் குற்றவாளிக்கு உரியத் தண்டனை பெற்றுத்தரக் கடுமையான வாதங்களை முன்வைத்தார். சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை முழுமையாக விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன், பெற்ற தந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக மகன் சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று அதிரடித் தீர்ப்பு கூறினார். சொத்து ஆசையினால் பெற்ற தந்தையையே மகன் மண்வெட்டியால் அடித்துக் கொன்ற இச்சம்பவத்தின் இறுதித் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.