இறந்த தாயின் உடலை வைத்து நாட்கணக்கில் பூஜை செய்த மகன் - பாட்டியைப் பார்க்க வந்த பேத்திக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி!

 
தாயின் உடலை

கேரள மாநிலம் கொல்லம் அருகே இறந்த தாயின் உடலை வெளியே சொல்லாமல், வீட்டிலேயே வைத்து நாட்கணக்கில் பூஜை செய்து வழிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது தாய் சின்னத்தம்மா (90) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். தாயின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கிருஷ்ணசாமி, அதுபற்றி உறவினர்களுக்கோ அல்லது அயலவருக்கோ தெரிவிக்காமல் ரகசியமாக மறைத்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

சடலத்திலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கத் தினமும் ஈரத்துணியால் உடலைத் துடைத்து, பவுடர் பூசி, வெள்ளைத் துணியால் மூடி வைத்துள்ளார். மேலும், தாயின் உடலைத் தெய்வமாக நினைத்துத் தினமும் உணவளித்துச் சடங்குகளுடன் பூஜை செய்து வந்துள்ளார்.

கிருஷ்ணசாமியின் மகள் தனது பாட்டியைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் உள்ளே பாட்டி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு ஓடியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளத்துப்புழா காவல் துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கிருஷ்ணசாமி கடுமையான மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பது உறுதியானது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் பாதுகாப்பாக மீட்டு உரிய மனநலச் சிகிச்சைக்காகக் காப்பகத்தில் அனுமதித்தனர்.