தந்தையை புற்றுநோய்க்கு பறிகொடுத்த ஐஏஎஸ் சோனல் கோயல்… விழிப்புணர்வுக்காக கிளிமஞ்சாரோ மலையேற்றம்!
புற்றுநோய் தடுப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சோனல் கோயல் ஆப்பிரிக்காவின் உயரமான மலையான கிளிமஞ்சாரோவில் மலையேற்றம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
திரிபுரா மாநிலப் பிரிவைச் சேர்ந்த 43 வயதான சோனல் கோயல், கடந்த 2023-ம் ஆண்டு புற்றுநோயால் தனது தந்தையை இழந்தார். அந்தத் துயரத்தை சமூகப் பணியாக மாற்ற முடிவு செய்த அவர், புற்றுநோய் தடுப்பு, ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதைப்பொருள் இல்லாத இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
எட்டு நாட்கள் நடைபெற்ற மலையேற்றத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 2-ம் தேதி 5,756 மீட்டர் உயரத்தில் உள்ள ஸ்டெல்லா பாயிண்டை அடைந்தார். அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றி, “போதை வேண்டாம்; கனவுகளைத் தேர்ந்தெடுங்கள்” என்ற விழிப்புணர்வு வாசகத்தையும் முன்வைத்தார்.இதற்கு முன்பு எவரெஸ்ட் அடிவார முகாம் மலையேற்றத்தின்போதும் அவர் இந்த விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டார்.
