சோனியா காந்தி உடல்நிலை "வேகமான முன்னேற்றம்; ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்" - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
கடந்த மார்ச் 24ம் தேதி காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை அறிக்கையில், மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் வெளியிட்டுள்ள தகவலின்படி, "சோனியா காந்தி தற்போது மிகவும் நலமாக இருக்கிறார். அவர் இயல்பாக நடக்கிறார், இன்று காலை உணவையும் உட்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலில் ஏற்பட்ட தொற்றுக்காக அவருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு அவரது உடல்நிலை சிறப்பாக ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தியின் முன்னேற்றம் சீராக இருப்பதால், அவர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

79 வயதான சோனியா காந்திக்குத் டெல்லியில் நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக ஆஸ்துமா பாதிப்பு சற்று அதிகரித்திருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று தனது தாயின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல தலைவர்கள் சோனியா காந்தி விரைவில் நலம் பெற வேண்டித் தங்களது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
