மகனின் காதல் விவகாரம்... விஷம் குடித்து தாய் தற்கொலை...தந்தை, தங்கை இருவருக்கு தீவிர சிகிச்சை!
தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாண்டீஸ்வரன் (47 வயது). இவரது மனைவி நாகலட்சுமி (40 வயது). இவர்களுக்குப் பால்பாண்டி (22 வயது) என்ற மகனும், யோகலட்சுமி (18 வயது) என்ற மகளும் உள்ளனர். இவர்களின் மகன் பால்பாண்டி பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும் நிலையில், அப்பகுதிப் பெண்ணொருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்தக் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகப் பெண்ணின் தரப்பினர் பாண்டீஸ்வரன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடும் மனவேதனை அடைந்த பாண்டீஸ்வரன், அவரது மனைவி நாகலட்சுமி மற்றும் மகள் யோகலட்சுமி ஆகிய மூவரும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து பாண்டீஸ்வரன் மற்றும் யோகலட்சுமி ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துக் கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
