"சாரி ராசா... மன்னிப்பு கேட்க முடியாது!" - ஆ.ராசாவுக்கு மாரிதாஸ் பதிலடி!
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா பேசியதாக ஒரு ஆடியோவை மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த ஆடியோவில் கட்சித் தலைமை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்துப் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
வைரலாகி வரும் அந்த ஆடியோவில் ஆ.ராசா பேசுவது போல், 2ஜி வழக்கில் கைதான போது திமுகவினர் யாரும் தன்னைச் சந்திக்க வரவில்லை என்றும், கனிமொழி கைதான பிறகே அனைவரும் டெல்லிக்கு வந்தனர் என்றும் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் - கனிமொழி இடையே பஞ்சாயத்து வரும்; ஸ்டாலின் தனது தங்கையை ஒருபோதும் நம்ப மாட்டார்" என்று ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆ ராசா அவர்களுக்கு Sorry மன்னிப்புக்கு கேட்க முடியாது... pic.twitter.com/UTX35rNAJr
— Maridhas (@MaridhasAnswers) April 3, 2026
சிறையில் தன்னைச் சந்தித்த அழகிரி, "அப்ரூவராகி வெளியே வர வேண்டியதுதானே" என்று கூறியதாகவும், கலைஞர் டிவி விவகாரங்கள் ஸ்டாலினுக்குத் தெரியும் என்றும் அதில் பேசப்பட்டுள்ளது.
"என்னிடம் போதுமான பணம், மூளை இருக்கிறது. நான் எழுதும் புத்தகம் வெளியானதும் நான் ஒரு ஸ்டாராக மாறுவேன்" என ஆ.ராசா கூறுவது போல் ஆடியோ முடிகிறது. இந்த ஆடியோ முற்றிலும் போலியானது என்று மறுத்துள்ள ஆ.ராசா, தனது வழக்கறிஞர்கள் மூலம் மாரிதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த ஆடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருத்தி அமைக்கப்பட்ட 'டீப்ஃபேக்' ஆடியோ என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க இது வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளார்.

வழக்கறிஞர் நோட்டீஸைப் பெற்றுக் கொண்ட மாரிதாஸ், அதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "திமுக ஆ.ராசா அவர்களுக்கு.. Sorry, மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது" என்று ஒற்றை வரியில் பதிலடி கொடுத்துள்ளார். இது திமுக மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே சமூக வலைதளப் போரை உருவாக்கியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் முக்கியத் தலைவர்கள் குறித்த இத்தகைய ஆடியோக்கள் வெளியாவது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியால் இத்தகைய ஆடியோக்களின் உண்மைத்தன்மையைச் சோதிப்பது தேர்தல் ஆணையத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
