“என் குழந்தையைப் பார்க்க கூட தாத்தா வரலை!” - மேடையிலேயே தேம்பி தேம்பியழுத அன்புமணியின் மகள்கள் - ஜி.கே.மணி மீது பகிரங்கக் குற்றச்சாட்டு!

 
பாமக பாமக

 


தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தனது தாய் சௌமியா அன்புமணி மற்றும் பென்னாகரம் தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்த அன்புமணி ராமதாஸின் மகள்கள் சங்கமித்ரா மற்றும் சஞ்சுத்ரா, குடும்பப் பிரச்சினையை மேடையில் உருக்கமாகப் பேசி தேம்பியழுதது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


பென்னாகரம் தொகுதி ஏரியூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, பாமக-வின் மூத்த தலைவர் ஜி.கே.மணி தங்களையும், தங்களது தாத்தா ராமதாஸையும் பிரித்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். 

"எப்போதுமே பிரசவ வலி எடுத்தால் தாத்தா தான் மருத்துவமனைக்கு வந்து பார்ப்பார். ஆனால் எனக்குக் குழந்தை பிறந்து 6 மாதங்களாகியும், இதுவரை என் குழந்தையைத் தாத்தா பார்க்கவில்லை. ஏன், ஒரு போன் கூட அவரால் பண்ண முடியவில்லை. அதற்கு கூட ஜி.கே.மணி விடுவதில்லை" எனச் சங்கமித்ரா கண்ணீர் மல்கக் கூறினார்.

கடந்த ஒரு வருடமாகத் தங்களது கூட்டுக் குடும்பம் பிரிந்து கிடப்பதாகவும், பொங்கல் உள்ளிட்ட விழாக்களில் கூட தாத்தாவைச் சந்திக்க விடாமல் சிலர் தடுத்து வருவதாகவும் அவர்கள் தேம்பி அழுதபடி தெரிவித்தனர்.

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தனது தாயின் வெற்றியை விட, தங்களுக்குத் துரோகம் செய்தவர்கள் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியின் வெற்றி தான் தங்களுக்கு மிக முக்கியம் என அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

பாமக குடும்பத்திற்குள்ளேயே நிலவும் இந்தப் பூசல், தேர்தல் பிரசார மேடையில் கண்ணீராக வெளிப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும், ராமதாஸின் குடும்பத்தினருக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதா என்ற கேள்வியைச் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ எழுப்பியுள்ளது.