முத்தரப்பு டி20 தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்கா!

 
தென்னாப்பிரிக்கா

விண்ட்ஹோக்கில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில், ஜிம்பாப்வே அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. ஜோர்டன் ஹெர்மன் 53 ரன்களும் (29 பந்துகள்), கானர் எஸ்டர்ஹைசன் 32 ரன்களும், டெவால்ட் பிரெவிஸ் 32 ரன்களும் எடுத்தனர்.

206 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிராட் எவன்ஸ் மட்டும் தனித்து நின்று போராடி ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் (33 பந்துகள்) எடுத்தார்.

ஜிம்பாப்வே அணியால் 18 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு தொடரை வென்றது. பியோர்ன் போர்டுயின் மற்றும் டுவான் ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.