தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி; குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்!
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அரசியல் பிரமுகர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்
இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர் கைது
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் என்ன, உயிரிழந்தவர்களுக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
