அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு... 3 பெண்கள் உட்பட 17 பேர் சுட்டுக் கொலை!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடந்த 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியா அருகே உள்ள ஜெஃப்வில்லே பகுதியில், நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட கார் ஒன்றுக்குள் 8 ஆண்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.இரு சம்பவங்களிலும் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக்கும்பல்களுக்கு இடையிலான மோதல்களால் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
