கொடூரம்... தென்னாப்பிரிக்காவில் குடியிருப்புக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல், 12 பேர் பலி!

 
தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கிளிவ்லேண்ட் என்ற இடத்தில் ஜம்பர்ஸ் என்ற தற்காலிக குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 11:10 மணியளவில், அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்தது. அவர்கள் அங்கு வசித்து வந்த பொதுமக்களைக் குறிவைத்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

இந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டினால் குடியிருப்பு பகுதி முழுவதும் மக்களின் மரண ஓலமும் பயக் கூச்சலும் நிறைந்து காணப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு பல்வேறு இடங்களில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டனர். இந்த கொடூரத் தாக்குதலில் 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதுடன், 9 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளை நிற டொயோட்டா குவாண்டம் வாகனத்தில் வந்த 10 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடியதாகக் கூறும் போலீசார், அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.