"தென்னிந்திய திரையுலகம் அதன் தூண்களில் ஒன்றை இழந்துவிட்டது" - பிரசாத் லேப் சிவராமன் மறைவுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி!

 
பிரசாத் லேப் சிவராமன்

பிரசாத் லேப்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் எஸ். சிவராமன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ்  தளப் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார்.

கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், ஏவிட்  முதல் டிஜிட்டல் சினிமா வரையிலான திரையுலக மாற்றங்களில் சிவராமன் முக்கியப் பங்காற்றியுள்ளார் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

பிலிம் பிராசசிங், கலர் கரெக்‌ஷன் மற்றும் சவுண்ட் டெக்னாலஜி போன்றவற்றில் அவர் ஆற்றிய பணிகள் இந்தியாவில் பல புதிய தொழில்நுட்பங்களைச் சாத்தியமாக்கியுள்ளன. பிலிம் ரீல்களில் இருந்து டிஜிட்டல் சினிமாவுக்கு மாறிய காலகட்டத்தில் சக கலைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து, முன்னணி ஒளிப்பதிவாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார்.

சிவராமனின் உழைப்பைப் பாராட்டிய கமல்ஹாசன், "தனது வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 படங்களையாவது அவர் ஒலி இல்லாமல் பார்த்திருக்க வேண்டும். இது சாதாரணமான விஷயம் அல்ல" என வியந்து குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலகம் தனது உறுதியான பாறை போன்ற தூண்களில் ஒன்றை இழந்துவிட்டதாகவும், இந்தத் திடீர் மறைவு தனக்குப் மிகப் பெரிய இழப்பையும் ஈடுசெய்ய முடியாத வெறுமையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கமல்ஹாசன் தனது பதிவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.