₹6,200 கோடி இழப்பீடாக மனைவிக்கு வழங்க கோர்ட் உத்தரவு - தென் கொரிய வரலாற்றிலேயே மிக அதிக தொகை!

 
விவாகரத்து

தென் கொரிய நாட்டின் தொழிலதிபர் சே டே-வோன், தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக இந்திய மதிப்பில் சுமார் ₹6,200 கோடி வழங்க வேண்டும் எனச் சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான 'எஸ்கே குரூப்'  அதிபர் சே டே-வோன். இவருக்கும், அந்த நாட்டின் முன்னாள் அதிபரின் மகளான ரோ சோ-இயோங்கிற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது: தென்கொரியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இந்த விவாகரத்து வழக்கில், சியோல் உயர் நீதிமன்றம் தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

விவாகரத்து

வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, தொழிலதிபர் சே டே-வோனின் சொத்துக்களில் இருந்து அவரது முன்னாள் மனைவிக்கு உரிய பங்கைப் பிரித்து வழங்கி உத்தரவிட்டது.

விவாகரத்து இழப்பீடு மற்றும் சொத்துப் பங்கீடாக 944 பில்லியன் கொரிய வான் (இந்திய மதிப்பில் சுமார் ₹6,200 கோடி) தொகையை ரோ சோ-இயோங்கிற்கு தொழிலதிபர் சே டே-வோன் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய நாட்டின் விவாகரத்து வழக்கு வரலாற்றிலேயே ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.