ரூ17000/-கோடி விவாகரத்து செட்டில்மெண்ட்... கேமிங் நிறுவன அதிபர் குவான் ஹியுக்-பின் மனைவிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

 
தென் கொரியா

 

 

தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் நிறுவனரான குவான் ஹியுக்-பின், தனது மனைவியுடனான விவாகரத்து வழக்கில் 2.55 டிரில்லியன் வான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடிக்கும் அதிகம்) சொத்துப்பங்கீடாக வழங்க வேண்டும் என்று சியோல் குடும்ப நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தென் கொரிய வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கொன்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகை இதுவேயாகும்.

 

  • தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் உரிமையாளர் குவான் ஹியுக்-பின் ஆவார். இந்த நிறுவனத்தில், பிளாக்பஸ்டர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டான ‘கிராஸ்பயர்’ மற்றும் ‘லாஸ்ட் ஆர்க்’ போன்ற உலகப் புகழ்பெற்ற கேம்கள் உருவாக்கப்பட்டன.

  • ஸ்மைல்கேட் நிறுவனத்தின் முழு பங்குகளும் குவான் ஹியுக்-பின் வசம் மட்டுமே இருந்தன. கடந்த 2001-ம் ஆண்டு குவானுக்குத் திருமணம் நடைபெற்றது.

  • இந்த நிலையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குவானின் மனைவி லீ ஹ்வா-ஜின், கடந்த நவம்பர் 2022-ம் ஆண்டு விவாகரத்து மற்றும் சொத்து பிரிப்பு கோரி சியோல் குடும்பநல நீதிமன்றத்தை நாடினார்.

 

சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அப்போது குவான்-லீ தம்பதியருக்கு விவாகரத்து வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது.

அத்துடன் குவான் தனது நிறுவனத்தின் 35 சதவீதப் பங்குகளை 2.5 டிரில்லியன் வான் (இந்திய மதிப்பில் ரூ.15,000 கோடிக்கு மேல்) மனைவிக்கு உடனடியாக மாற்ற வேண்டும். இதுதவிர கூடுதலாக 65 பில்லியன் வான் (ரூ.461.93 கோடி ரூபாய்) ரொக்கப் பணமாகவும் லீ-க்கு வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம்பதியினர் இருவருமே திருமண முறிவுக்கு சமமான பொறுப்பைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட ஜீவனாம்சக் கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.