தூக்கப் போட்டியில் அசத்திய தாத்தா: இளைஞர்களை விஞ்சி தென்கொரிய முதியவர் சாதனை!

 
south koreya south koreya

தென்கொரியாவில் அதிகரித்து வரும் தூக்கமின்மைப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சியோல் மாநகராட்சியால் நடத்தப்பட்ட வினோதமான தூக்கப் போட்டியில், 80 வயது முதியவர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சியோலின் ஹான் நதிக்கரையில் உள்ள பூங்காவில் மே 2 அன்று நடைபெற்ற இந்த 'பவர் நேப்' போட்டியில், சுமார் 170 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது தூங்கும் திறமையை வெளிப்படுத்தினர்.

வெறுமனே கண்களை மூடிப் படுத்திருப்பது மட்டும் இந்த வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. போட்டியாளர்களின் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு, 2 மணி நேரக் கால அவகாசத்தில் யாருடைய இதயத் துடிப்பு மிகவும் சீராகவும் குறைவாகவும் இருக்கிறதோ, அவர்களுக்கே அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. சுற்றியுள்ள பல சத்தங்கள் மற்றும் தொந்தரவுகளுக்கு மத்தியிலும் அசராமல் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தச் சவாலான போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற போதிலும், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 80 வயது முதியவர் ஒருவர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவரைத் தொடர்ந்து 37 வயதான அலுவலக ஊழியர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டி, நவீன வாழ்க்கைச் சூழலில் ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.