ரயில் டிக்கெட் இருந்தால் பஸ்ஸில் இலவச பயணம் - தெற்கு ரயில்வே அசத்தல் ஏற்பாடு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே இலவசப் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் மறுசீரமைப்புப் பணிகள் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்கின. இந்தப் பணிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதால், 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் படும் அவதியைக் குறைக்க இந்தச் சிறப்புப் பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் - கடற்கரை மற்றும் கடற்கரை - தாம்பரம் ஆகிய இரு மார்க்கங்களிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உங்களிடம் மின்சார ரயிலுக்கான பயணச்சீட்டு அல்லது மாதாந்திர பாஸ் இருந்தால், இந்தப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். இந்தப் பேருந்துகளின் முன்பக்கத்தில் 'Southern Railway Contract Bus' என்ற ஆங்கில ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் மொத்தம் 20 சிறப்புப் பேருந்து சேவைகள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் முக்கியப் பேருந்து நிறுத்தங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகளிடம் ரயில் டிக்கெட் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பதுடன், கூட்டத்தை நெறிப்படுத்தி பயணிகளுக்கு வழிகாட்டும் பணிகளையும் மேற்கொள்வார்கள்.
முதலில் பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயணிகளின் அவசரத் தேவையைக் கருத்தில்கொண்டு இன்று முதலே இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
