அதிக சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை... ₹243 கோடி வருவாய் ஈட்டி முதலிடம்!
கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் அதிக அளவிலான சிறப்பு ரயில்களை இயக்கி, அகில இந்தியச் சாதனையை முறியடித்து இந்திய அளவில் முதன்மை மண்டலமாகத் தெற்கு ரயில்வே உருவெடுத்துள்ளது. பண்டிகைக் காலங்கள், கோடை மற்றும் குளிர்கால விடுமுறை நாட்களை முன்னிட்டுப் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகத் தெற்கு ரயில்வே மேற்கொண்ட அசாத்திய திட்டமிடல்கள் தற்பொழுது பெரும் சாதனையாக மாறியுள்ளன.
கடந்த நிதியாண்டில் மட்டும் தெற்கு ரயில்வே 2,229 சிறப்பு ரயில்களைத் திட்டமிட்டு, மொத்தம் 2,513 முறை இயக்கியுள்ளது. எளிய சாமானிய மக்கள் எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றி பயணிக்கும் வகையில், 1,762 முறை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவைகள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்ததோடு, ரயில்வே துறைக்கும் வரலாறு காணாத வருவாய் கிடைத்துள்ளது.’
தெற்கு ரயில்வேயின் இந்தச் சிறப்புச் சேவைகளின் மூலம் ஒட்டுமொத்தமாக 32.98 லட்சம் பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இதன் மூலம் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு மட்டும் சுமார் ₹243.22 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இந்தியாவின் மற்ற அனைத்து ரயில்வே மண்டலங்களையும் விடத் தெற்கு ரயில்வே இதில் அசாத்திய மைல்கல்லை எட்டியுள்ளது. இயக்கப்படும் ஒவ்வொரு சிறப்பு ரயிலிலும் சராசரியாக 1,312 பயணிகள் வீதம் பயணித்துள்ளனர். இந்த அசாத்திய சராசரியானது, இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த அகில இந்தியச் சராசரியை விடப் பல மடங்கு அதிகமாகும். இதன் மூலம் இந்திய அளவில் சிறப்பு ரயில்களை திறம்பட இயக்கியதில் முதன்மை மண்டலமாகத் தெற்கு ரயில்வே விஸ்வரூபம் எடுத்துள்ளது.
