எஸ்.பி.வேலுமணிக்கு அடுத்த சிக்கல்.. 51 பணி நியமனங்கள் ரத்து - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மேலும் ஒரு புதிய பின்னடைவாக, அவரது பதவிக்காலத்தில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்களைச் சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்தப் பணி நியமனங்கள் அனைத்தும் முறையான அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல், முற்றிலும் தன்னிச்சையாகவும் அவசர அவசரமாகவும் நடத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஒரே நாளில் பணி நியமனத்திற்கான அதிகாரப்பூர்வ விளம்பரம் வெளியிடப்பட்டு, அதே நாளில் தகுதியான நபர்களுக்கு நேர்காணல்களும் நடத்தி முடிக்கப்பட்டு, அன்றைய தினமே பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அசாத்திய வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற நியமன முறை பெரும் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விளம்பரம் செய்யப்பட்ட அன்றே நேர்காணல் நடத்தி ஆட்களைத் தேர்வு செய்தது இயற்கை நீதிக்கும், அரசு வேலைவாய்ப்பு விதிகளுக்கும் முற்றிலும் எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. இதில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் ஆதாரங்களுடன் உறுதியானதைத் தொடர்ந்து, முறையற்ற வழியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களையும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மாநகராட்சிப் பணிகளில் முறைகேடாகத் தங்களது ஆதரவாளர்களை நியமித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கோவை அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
