தவெகவில் இணைந்த 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

 
அதிமுகதவெக அதிமுகதவெக

அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்குத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த  நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்ட முக்கியப் பிரமுகர்களான ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய நால்வருக்கும் சட்டப்பேரவைச் செயலகம் மூலமாகச் சபாநாயகர் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். கட்சியின் விதிகளை மீறியது மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எழுந்துள்ள விவகாரங்கள் தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுக

சபாநாயகர் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், "அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தது தொடர்பாக, உங்கள் மீது ஏன் உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள், இதுகுறித்த தங்களின் தகுந்த மற்றும் முறையான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகச் சபாநாயகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆதரவு

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாற்றுக்கட்சிகளில் இருந்து பல முக்கியப் பிரமுகர்கள் தவெகவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், அதிமுகவிலிருந்து வந்து இணைந்த இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான சபாநாயகரின் இந்தத் துரித நடவடிக்கை, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்களை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸுக்கு தவெக தரப்பிலிருந்தும், சம்பந்தப்பட்ட 4 பிரமுகர்கள் தரப்பிலிருந்தும் என்ன மாதிரியான விளக்கம் அளிக்கப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.