ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பிரபாகர் அழைப்பு - இபிஎஸ் முன்னிலையில் ஆக.30-ல் விசாரணை!

 
அதிமுக

அதிமுகவிலிருந்து விலகித் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளையும் ராஜினாமா செய்த அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் பல்வேறு உட்கட்சிப் பூசல்கள் வெடித்துள்ளன.

தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம் ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, தற்போது தனது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைக்காததே தோல்விக்குக் காரணம் என நிர்வாகிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி செயல்பட முயல்வதாகக் கூறி முன்னணி நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

ஜேசிடி பிரபாகர்

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களிடம் ஏற்கனவே 3 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் அதிமுக

அதிமுகவில் இருந்து விலகி எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களிடம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே விசாரணை நடத்தச் சபாநாயகர் பிரபாகர் திட்டமிட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

இதற்காகத் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்திய பாமா ஆகியோருக்குச் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.