தற்காலிக சபாநாயகர் ஆகிறார் ஜே.சி.டி.பிரபாகர்... இன்று 233 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 233 புதிய உறுப்பினர்களும், தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று (மே 11) முறைப்படி எம்.எல்.ஏ-க்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டு பொறுப்பேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து, 17-வது சட்டமன்றத்தின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் கூட்டம் நாளை (மே 12) நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர், புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அவர் தமிழகச் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நாளை கூடும் சட்டமன்றக் கூட்டத்தில் முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு, சபாநாயகர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேறு யாரையும் முன்மொழியாத பட்சத்தில், ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை போட்டி இருந்தால் மட்டும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றுவார்கள். புதிய சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முதல் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
