சபாநாயகர் தேர்தல்... ஜே.சி.டி. பிரபாகருக்கு எதிராகச் சக்கரபாணி?... களமிறங்கும் திமுக!

 
அதிமுக அதிமுக

தமிழக முதலமைச்சராகத் தவெக தலைவர் விஜய் நேற்று (மே 10) பதவியேற்ற நிலையில், 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் புதிய எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வரும் நிலையில், சட்டமன்றத்தின் அடுத்த முக்கிய நிகழ்வான சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் தேர்தல் நாளை (மே 12) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுவதால் கோட்டை வளாகமே தற்போதே பரபரப்பாகக் காணப்படுகிறது.

ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுபவம் வாய்ந்த தலைவரான இவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க விஜய் தரப்பு விரும்பினாலும், எதிர்க்கட்சியான திமுக அதற்கு முட்டுக்கட்டை போடத் திட்டமிட்டுள்ளது. தவெக-வின் இந்த நகர்வுக்குப் போட்டியாக, முன்னாள் அமைச்சரும் அனுபவம் மிக்கவருமான சக்கரபாணியைச் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்த திமுக தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நாளை நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை முன்மொழிந்தால், சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கக் குரல் வாக்கெடுப்பு அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். திமுக-வுடன் இணைந்து அதிமுக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் செயல்பட்டால் ஜே.சி.டி. பிரபாகர் வெற்றி பெறுவதில் கடும் சவால் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய அரசின் முதல் பலப்பரீட்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சபாநாயகர் தேர்தல், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.