வார இறுதி , சுப முகூர்த்தம்... மே 8 முதல் 1,765 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தில் வரும் வார இறுதியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,765 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மே 8 (வெள்ளிக்கிழமை) சுப முகூர்த்த தினமாகவும், மே 9, 10 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாகவும் வருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மே 8 அன்று 685 பேருந்துகளும், மே 9 அன்று 735 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து திருவண்ணாமலை, பெங்களூரு மற்றும் ஆந்திரா செல்லும் பகுதிகளுக்குச் சுமார் 145 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இது தவிரப் பிற முக்கிய நகரங்களிலிருந்து 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.tnstc.in) அல்லது மொபைல் செயலி மூலம் தங்களது பயணத்தைச் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டுச் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
