சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அதிரடி - ஒரே வாரத்தில் 378 புகார்களுக்கு உடனடித் தீர்வு!

 
சிங்கப்பெண்

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை', ஒரே வாரத்தில் 378 புகார்களுக்குத் தீர்வுகண்டு அசத்தியுள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஜூலை 24 முதல் ஜூலை 30 வரையிலான ஒரே வாரத்தில் களப்பிரிவுகள் மூலம் 378 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 23 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 4 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பாகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 3 குழந்தைத் திருமணங்கள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

சிங்கப்பெண்

பள்ளியிலிருந்து இடைநின்ற 62 குழந்தைகள் கண்டறியப்பட்டு மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். அறிவுசார் குறைபாடுடைய 9 நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் குற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்ட 10,320 பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிங்கப்பெண் அதிரடிப்படை

பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,711 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைத் துரிதமான நடவடிக்கைகள் மூலமும், விழிப்புணர்வுப் பணிகள் மூலமும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.