திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு ஸ்பெஷல் ரயில்... 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!
திருவண்ணாமலையில், உலகப்பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையைச் சிவனாகவே கருதி, ஒவ்வொரு பவுர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வரும் ஏப்ரல் 30-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு தொடங்கி, மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு வரை நீடிக்கிறது.
வருடத்தில் மிக முக்கியமான இந்த பவுர்ணமி தினத்தில், சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்யும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து வசதிகளைச் சீர் செய்வது பெரும் சவாலாகவே உள்ளது. வழக்கமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ரயில்களில் பயணிக்கவே பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாகச் சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், கிரிவலம் முடிந்து தங்களது ஊர்களுக்குத் திரும்பிச் செல்லப் போதிய ரயில் வசதி இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பேருந்துகளில் நிலவும் அதிகப்படியான கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதைக் காட்டிலும், ரயில் பயணம் பாதுகாப்பானது என்பதால், இந்த ஆண்டு தெற்கு ரயில்வே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குத் திருவண்ணாமலையில் இருந்து நேரடி சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பதே பக்தர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
30 லட்சம் பேர் ஒரே நேரத்தில் திரளும் இந்த ஆன்மீகத் திருவிழாவில், ரயில்வே நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டுச் சிறப்பு ரயில்களை அறிவித்தால் மட்டுமே, கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க முடியும். பக்தர்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு ரயில்வே செவிசாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
