முன்னாள் மனைவிக்கு திருமணம் நடத்தி வைத்த 'ஸ்பைடர்மேன்' நடிகர் டோபி மெக்குயர்
ஹாலிவுட்டின் பிரபல 'ஸ்பைடர்மேன்' திரைப்படப் புகழ் நடிகர் டோபி மெக்குயர், தனது முன்னாள் மனைவியும் பிரபல நகை வடிவமைப்பாளருமான ஜெனிஃபர் மேயரின் இரண்டாவது திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்
ஜெனிஃபர் மேயர் (49) மற்றும் நைஜீரியப் பெரும் கோடீஸ்வரத் தொழிலதிபர் அடேபாயோ ஒகுன்லேசியின் மகனும், இசை நிறுவனத் தலைவருமான ஜெஃப்ரி ஒகுன்லேசி34) ஆகியோர் ஹவாயில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ரிசார்ட்டில் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
இத்திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக மட்டுமன்றி, மணமக்களுக்கு முன்னின்று திருமணச் சடங்குகளைத் தலைமை தாங்கி நடத்தி வைத்து (Officiated) வாழ்த்தினார் நடிகர் டோபி மெக்குயர்.
டோபி மெக்குயர் மற்றும் ஜெனிஃபர் மேயர் ஜோடி 2007-ல் திருமண பந்தத்தில் இணைந்தனர். 2016-ல் பிரிந்து வாழத் தொடங்கிய இவர்கள், 2020-இல் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். சட்டரீதியான நடைமுறைகள் முடிந்து கடந்த செப்டம்பர் 21-ம் தேதி தான் இவர்களது விவாகரத்து அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. விவாகரத்து பெற்ற சில வாரங்களிலேயே தனது முன்னாள் மனைவியின் மறுமணத்தை அவரே முன்னின்று நடத்தி வைத்து முதிர்ச்சியான நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனிஃபர் மேயர் - ஜெஃப்ரி இணையருக்கு ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இவர்களது கோலாகலமான திருமண விழாவில் லியோனார்டோ டிகாப்ரியோ, ஜெஃப் பெசோஸ், லாரன் சான்செஸ் மற்றும் கோர்ட்னி காக்ஸ் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
