தமிழகத்தில் அமையவுள்ள 'ஒலிம்பிக் பவன்' - விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

 
ஆதவ்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு எனத் தனியாகப் பிரத்யேக அலுவலகம் அமைக்கப்படும் என்றும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் 'ஒலிம்பிக் பவன்' அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மையங்களை உருவாக்குவது குறித்த அரசின் அடுத்தகட்ட திட்டங்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களை உலக அளவிற்குத் தயார்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்துப் பேசிய அமைச்சர், "தற்போது தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு எனத் தனியாகச் சொந்த அலுவலகம் இல்லை. ஆனால், கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் விளையாட்டுத் துறைக்கெனத் தனியாக 'ஒலிம்பிக் பவன்' போன்ற பிரம்மாண்ட உள்கட்டமைப்புகள் உள்ளன. அதேபோல தமிழ்நாட்டிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் பவன் அமைப்பதற்காக தகுந்த இடங்களைப் பார்த்து வருகிறோம்" என்று கூறினார்.

சென்னையின் முக்கியப் பகுதியான கிழக்கு கடற்கரைச் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னாட்டு மையத்தின்  கட்டுமானப் பணிகள் குறித்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கலைஞர் பன்னாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் சுமார் 40 விழுக்காடு வரை நிறைவடைந்துள்ளன. பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மையத்தில் சினிமா மற்றும் வணிக ரீதியிலான கலை நிகழ்ச்சிகள்  நடத்த அனுமதிக்கப்படும். இருப்பினும், அங்கு அமைக்கப்படும் சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள் விளையாட்டுத் துறை சார்ந்த போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும்; இதர வணிக நிகழ்வுகளுக்கு விளையாட்டு மைதானங்கள் வழங்கப்படாது என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.