இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு: 15 பேருக்கு 260 ஆண்டுகள் வரை சிறைதண்டனை!
இலங்கையை உலுக்கிய 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு 200 ஆண்டுகள் முதல் 260 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததாக இலங்கை டெய்லி மிரர் தெரிவித்துள்ளது; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த வழக்கில் மொத்தம் 24 பேர் மீது 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், 15 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தண்டனையைப் பொறுத்தவரை, குற்றவாளிகளில் சிலருக்கு 200 ஆண்டுகள், சிலருக்கு 220 ஆண்டுகள், சிலருக்கு 240 ஆண்டுகள் எனவும், ஒருவருக்கு அதிகபட்சமாக 260 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019-ம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடர் தாக்குதல்கள் இலங்கையின் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. மூன்று தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய குற்றவாளிகளுக்கு சட்டரீதியான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
