படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.200 கோடி மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருட்கள் பறிமுதல் - இலங்கை கடற்படை அதிரடி!
இலங்கை யாழ்ப்பாணம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற படகில் நடத்தப்பட்ட சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குசுமந்துறை மாதகல் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த பிளாஸ்டிக் படகை இலங்கை கடற்படையினர் மடக்கிப் சோதனையிட்டனர்.

அந்தப் படகில் இருந்த சாக்குமூடைகளைப் பிரித்து ஆய்வு செய்தபோது, அதில் 35 கிலோ ஹெராயின் மற்றும் 45 கிலோ மெத்தபெட்டமைன் போன்ற உயர்ரக போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தமிழகக் கடற்கரைப் பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதா என்பது குறித்துத் தமிழக உளவுத்துறை மற்றும் கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
