ராமர் பாலத்தை படகில் பார்க்கலாம்! இலங்கையில் இன்று புதிய சுற்றுலா தொடக்கம்!
ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை படகு மூலம் சென்று பார்வையிடும் புதிய ஆன்மிக சுற்றுலா சேவையை இலங்கை அரசு இன்று (செப்.28) தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து வரும் ஆன்மிக சுற்றுலா பயணிகளையும் ஈர்க்க முடியும் என இலங்கை அரசு எதிர்பார்க்கிறது.தமிழகத்தின் தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில் ராமர் பாலம் என அழைக்கப்படும் மணல் திட்டுகள் அமைந்துள்ளன. மொத்தம் 18 மணல் திட்டுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவற்றில் 6 இந்திய கடற்பகுதியிலும், 12 இலங்கை கடற்பகுதியிலும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை சுற்றுலாத்துறை சார்பில் தலைமன்னாரில் இருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிடும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.இதற்கான சோதனை ஓட்டம் கடந்த செப்.25-ம் தேதி நடைபெற்றது. இலங்கை வடக்கு மாகாண கவர்னர் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் 4 படகுகளில் தலைமன்னாரில் இருந்து புறப்பட்டு மணல் திட்டுகள் அமைந்துள்ள கடற்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ராமர் பாலம் தொடர்பான இந்த மணல் திட்டுகள் ராமாயணத்துடன் தொடர்புடையதாக பக்தர்களால் நம்பப்படும் முக்கிய ஆன்மிக இடமாக உள்ளது. இதனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு இந்த புதிய படகு சேவை கூடுதல் ஈர்ப்பாக இருக்கும் என இலங்கை அரசு கருதுகிறது.
புதிய சுற்றுலா திட்டத்தின் மூலம் தலைமன்னார் மற்றும் மன்னார் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் அதிகரிப்பதுடன், அந்நிய செலாவணி வருவாயும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ராமர் பாலத்தை நேரடியாக படகில் சென்று பார்வையிடும் இந்த புதிய வசதி தொடங்கியிருப்பது ஆன்மிக சுற்றுலா பயணிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
