தமிழக மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்!

 
மீனவர்கள் மீனவர்கள்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இன்று அதிகாலை தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து நேற்று வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் கடல் பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப்படகைச் சுற்றி வளைத்தனர்.

மீனவர்கள்

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, படகில் இருந்த 10 மீனவர்களைக் கைது செய்ததோடு, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு இலங்கை அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளிலும் இலங்கை கடற்படை இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்கள் இலங்கை கச்சத்தீவு படகு

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட செய்தி பாம்பன் மற்றும் ராமேசுவரம் பகுதி மீனவ மக்களிடையே சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

"தொடர்ந்து எங்கள் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்" என மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.